இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் ரிதிமான் சஹா. 2010ம் ஆண்டே இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகிவிட்ட சஹா, 2014ல் தோனியின் ஓய்வுக்கு பிறகுதான் டெஸ்ட் அணியின் நிரந்தரமான விக்கெட் கீப்பராக ரிதிமான் சஹா அணியில் வாய்ப்பு பெற்றார். 

சஹா நல்ல டெக்னிக்கை கொண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் தான் என்றாலும், அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விக்கெட் கீப்பராக ஆடிவருகிறார். 

இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1238 ரன்களை அடித்திருப்பதுடன், 92 கேட்ச்கள் மற்றும் 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2018ம் ஆண்டில் காயமடைந்த சஹா, அதன்பின்னர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்திய அணியில் ஆடவில்லை. இந்த காலக்கட்டத்தில் ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக வாய்ப்பு பெற்று, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதங்களை விளாசினார். 

ஆனால் அவரது விக்கெட் கீப்பிங் சரியில்லாததால், ரிதிமான் சஹா மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும் என்பதால், அஷ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் ஸ்பின்னர்களுக்கு ரிஷப் பண்ட்டால் சரியாக விக்கெட் கீப்பிங் செய்யமுடியாது என்பதால் சஹா மீண்டும் அணியில் இடம்பிடித்து ஆடிவருகிறார். 

Also Read - கோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி

தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறார் சஹா. 

இந்நிலையில், ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், யாருடைய பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்வது கடினம் என்று சஹாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிதிமான் சஹா, பும்ராவின் பவுலிங்கை விக்கெட் கீப்பிங் செய்வதுதான் கடினம். அவர் பந்துவீசும் கோணம் அந்த மாதிரி.. மிகவும் கடினமானது. பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் கோணத்தில் பும்ரா பந்துவீசுவார். எனவே அவர் பந்துவீசும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சஹா தெரிவித்துள்ளார்.