கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக பார்க்கப்படுகின்றன. இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் உலக கோப்பையில் சவாலான அணிகளாக திகழும். 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங். பொதுவாக நல்ல பேட்டிங் அணியாகவே திகழ்ந்த இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சுழலில் எதிரணிகளை தெறிக்கவிடுகிறது. 

பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் என்றால் இந்திய அணிக்கு பாதிப்பாக அமையும் என்ற காலமெல்லாம் போய்விட்டது. நம்மிடமும் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையான பவுலர்கள் நிறைய உள்ளனர்  என்று முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்திருந்தார். அந்தளவிற்கு இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது. 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியில் நான்கு ஃபாஸ்ட் பவுலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியிருந்தனர். நான்காவது ஃபாஸ்ட் பவுலர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே அணியில் எடுக்கப்பட்டிருந்தனர். 

ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்கள் என்பதால் அவர்களை கருத்தில் கொண்டு நான்காவது ஃபாஸ்ட் பவுலர் எடுக்கப்படவில்லை. ஆனால் கண்டிப்பாக நான்காவது ஃபாஸ்ட் பவுலர் வேண்டும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காம்பீர், இந்திய அணியில் ஒரு தரமான ஃபாஸ்ட் பவுலருக்கான தேவை உள்ளது. பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமாருக்கு சப்போர்ட்டுக்கு ஒரு ஃபாஸ்ட் பவுலர் தேவை. ஹர்திக் பாண்டியாவும் விஜய் சங்கரும் இருக்கிறார்களே என்ற கருத்தை நான் ஏற்கமட்டேன். அவர்கள் பார்ட் டைம் பவுலர்கள்தான். எனவே தரமான ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் தேவை என்று காம்பீர் கருத்து கூறியுள்ளார்.