கங்குலி உருவாக்கிய சிறந்த அணியை வைத்துத்தான் தோனி உலக கோப்பையை வென்றதாகவும் தங்களை மாதிரியான சிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்ததால் தோனியின் கேப்டன்சி பணி எளிமையாகிவிட்டதாகவும் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் தோனியும் ஒருவர். 2007ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். 2008ம் ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று 2014ம் ஆண்டு வரை இருந்தார். 2014ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 

கங்குலியின் கேப்டன்சியில் வெற்றி நடை போட ஆரம்பித்த இந்திய அணி, தோனியின் கேப்டன்சியில் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தது. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தார் தோனி.

தோனி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு, அவருக்கு கிடைத்த அணி முக்கியமான காரணம். சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் என கங்குலியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட திறமையான வீரர்கள் பலர் தோனிக்கு பக்கபலமாக இருந்தனர். 

சிறந்த அணியை பெற்றிருந்ததால்தான் தோனியால் இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடிந்தது என்ற எதார்த்தத்தை கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸின் கிரிக்கெட் கனெக்டெட் நிகழ்ச்சியில் பேசிய கவுதம் கம்பீர், 3 விதமான போட்டிகளுக்கும் மிகச்சிறந்த அணியை பெற்றிருந்த விதத்தில் தோனி அதிர்ஷ்டசாலி. 2011 உலக கோப்பையில், சச்சின், சேவாக், நான், யுவராஜ் சிங், விராட் கோலி ஆகிய வீரர்களை பெற்றிருந்ததால் தோனிக்கு கேப்டன்சி வேலை எளிதாக இருந்தது. கங்குலி கஷ்டப்பட்டு உருவாக்கிய அணியால் தான் தோனியால் நிறைய கோப்பைகளை ஜெயிக்க முடிந்தது என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.