உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

நான்காம் வரிசைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி பல வீரர்களை பரிசோதித்தது. ஆனால் கடைசி இரண்டு மாதங்களில் சிறப்பாக ஆடி நான்காம் இடத்தை பிடித்துவிட்டார் விஜய் சங்கர். விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நிதானமாக சூழலுக்கு ஏற்றவாறு பேட்டிங் ஆடும் அதேவேளையில், சில பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார். அதுமட்டுமல்லாமல் பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் ஃபீல்டிங்கும் சிறப்பாக செய்வதாலும் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் ராயுடுதான் நான்காம் வரிசை வீரர் என்று உறுதியாக தெரிவித்து அவருக்கு நம்பிக்கையூட்டினார் கேப்டன் கோலி. அவருக்கு உறுதியளித்துவிட்டு கடைசியில் உலக கோப்பையில் நீக்கப்பட்டிருப்பது, ஆசை காட்டி மோசம் செய்ததாக அமைந்துள்ளது. 

ராயுடுவின் நீக்கம், காம்பீருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய காம்பீர், ரிஷப் பண்ட்டை நீக்கியது குறித்து பெரிய விவாதம் தேவையில்லை என்பது என் கருத்து. அதேநேரத்தில் 48 ரன்கள் சராசரி வைத்திருக்கும் ராயுடுவை நீக்கியது மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம். இது உண்மையாகவே இதயத்தை நொறுக்கும் செயல் என்று வருத்தம் தெரிவித்தார். 

மேலும் 2007ல் ராயுடுவின் நிலையில் தான் நானும் இருந்தேன். அப்போது என்னை உலக கோப்பைக்கு தேர்வு செய்யவில்லை. அதனால் உலக கோப்பை அணியில் தேர்வாகாதது எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தும் என்பது எனக்கு நன்றாக தெரியும். உலக கோப்பையில் ஆட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கும். அந்த வகையில், உலக கோப்பை அணியில் தேர்வாகாத மற்ற வீரர்களைவிட ராயுடு மீது எனக்கு அதிக அனுதாபம் ஏற்பட்டது என்று காம்பீர் தெரிவித்தார். 

இப்போதே 33 வயதாகிவிட்ட ராயுடு, அடுத்த உலக கோப்பை அணியில் இடம்பெறுவது சாத்தியமில்லாத விஷயம். அதனால் இந்த உலக கோப்பையில் ஆடினால்தான் உண்டு. ஆனால் இதிலும் அவர் புறக்கணிக்கப்பட்டு விட்டாரே என்பதுதான் காம்பீரின் பெரிய வருத்தம். ராயுடுவுக்காக வருத்தம் தெரிவித்தாலும், சஞ்சு சாம்சன் தான் தன்னுடைய 4ம் வரிசை வீரருக்கான தேர்வு என்ற தனது நிலையிலிருந்து காம்பீர் மாறவில்லை.