கள வியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம் ஆகியவற்றில் ஒரு கேப்டனாக கோலி சொதப்பிவந்தார். அண்மைக்காலமாக அவரது கேப்டன்சி சற்று மேம்பட்டிருக்கிறது. 

உலக கோப்பையில் ஓரளவிற்கு நன்றாகவே செயல்பட்டார். முன்பைவிட அவரது கேப்டன்சி மேம்பட்டிருப்பதை பார்க்கமுடிகிறது. ஆனாலும் அவர் இன்னும் சிறந்த கேப்டனாக உருவாகவில்லை என்றே கவுதம் கம்பீர் கருதுகிறார். 

பொதுவாக நியாயமான விஷயங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை தெரிவிக்கும் கம்பீர், தான் விமர்சிக்கப்போகும் வீரர்களின் பிரபலத்தின் அடிப்படையில் சமரசம் எல்லாம் செய்துகொள்ளமாட்டார். தோனி, கோலி என எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் விளாசிவிடுவார். 

ஏற்கனவே பலமுறை கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் கம்பீர். ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்படும் கோலி, அந்த அணிக்கு ஒருமுறை கோப்பையை வென்றுகொடுத்ததில்லை. அதுமட்டுமல்லாமல் கோலியின் கேப்டன்சியில் ஆர்சிபி அணி பெரிய வெற்றிகரமான அணியாகவெல்லாம் திகழவில்லை. அதேநேரத்தில் ரோஹித் சர்மாவோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 

ஐபிஎல் நடந்துகொண்டிருந்தபோது, “கோலி ஒரு கேப்டனாக இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. கோலி உத்தி ரீதியாக மிகவும் மோசமாக செயல்படுகிறார். அதனால் தான் அவரால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. 7 ஆண்டுகளாக கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். அவரது கேப்டன்சி மோசமாக இருந்தும் கூட அவரை இன்னும் கேப்டன்சியிலிருந்து தூக்காததற்காக அந்த அணி நிர்வாகத்திற்கு கோலி நன்றி சொல்ல வேண்டும்” என்று கம்பீர் விமர்சித்திருந்தார். 

அதன்பின்னர் மீண்டும் கோலியின் கேப்டன்சியை விமர்சித்த கம்பீர், ”விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவர் ஒரு அப்ரெண்டீஸ். அவர் இன்னும் கேப்டன்சியில் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், கோலியை இப்போதும் சாடியிருக்கிறார் கம்பீர். “உலக கோப்பையில் கோலி கேப்டனாக நன்றாகவே செயல்பட்டார். ஆனாலும் அவர் ஒரு கேப்டனாக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. கோலி தன்னை சிறந்த கேப்டன் என்று நிரூபிக்க இன்னும் நிறைய தூரம் பயணித்து நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. 

அணியில் ரோஹித் சர்மாவை பெற்றிருப்பதால்தான் கோலி, நல்ல ஒருநாள் கேப்டனாக திகழ்கிறார். நீண்டகாலமாக கோலியுடன் தோனி இருந்திருக்கிறார். எனவே கோலி சிறந்த கேப்டனாக வலம்வர, ரோஹித்தும் தோனியும் தான் காரணம். கேப்டனுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போது தான் ஒரு கேப்டனின் தலைமைப்பண்பு தீர்மானிக்கப்படும். ஐபிஎல்லில் ரோஹித்தும் தோனியும் அவரவர் அணிக்காக கோப்பைகளை குவித்துக்கொடுத்துள்ளனர். ஆனால் கோலி கேப்டனாக இருக்கும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதேயில்லை என்பதையெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்” என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.