பிசிசிஐ-யின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பிசிசிஐ தலைவரானதுமே வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் பேசி, இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தினார். கங்குலியின் அதிரடியான நடவடிக்கையால், இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை வங்கதேசத்துக்கு எதிராக ஆடியது.

இந்நிலையில், அடுத்ததாக சர்வதேச கிரிக்கெட்டில் டாப் அணிகளான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மற்றொரு டாப் அணியையும் சேர்த்துக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் தொடர் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளார். 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் கங்குலி. 2021ம் ஆண்டு முதல், நான்கு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில்(தொடரில் கலந்துகொள்ளும் 4 நாடுகள்) நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில், கிரிக்கெட் ஆடும் பெரிய அணிகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசிப்பது வழக்கம். அந்தவகையில், பிசிசிஐ நிர்வாகிகளுடனான சந்திப்பில், நான்கு நாடுகள் ஆடும் சூப்பர் ஒருநாள் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது எந்தளவிற்கு வளர்கிறது? சாத்தியப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

ஐசிசி, அதிகபட்சமாக 3 நாடுகள் கலந்துகொண்டு ஆடும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்குத்தான் அனுமதி மட்டுமே வழங்கியிருக்கிறது. ஐசிசியே, அனைத்து அணிகளும் கலந்துகொள்ளும் சில பெரிய தொடர்களை நடத்துவதால், 3 அணிகளுக்கு மேல் ஆடுவதற்கு அனுமதி கொடுப்பதில்லை. எனவே அதிகபட்சமாக முத்தரப்பு தொடர் தான் நடத்த முடியும் என்கிற நிலை தான் உள்ளது. இந்நிலையில், அதை உடைத்து, நான்கு அணிகள் ஆடும் ”சூப்பர் தொடர்”-ஐ நடத்த கங்குலி அதிரடியாக திட்டமிட்டுள்ளார். அதற்கான தீவிர முயற்சிகளை இனிவரும் நாட்களில் எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கங்குலியின் நான்கு நாடுகள் ஆடும் சூப்பர் ஒருநாள் தொடர் என்பது ஃப்ளாப் ஐடியா என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லதீஃப் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரஷீத் லதீஃப், இதுமாதிரி 4 அணிகள் மட்டும் ஒரு தொடரில் ஆடுவது என்பது, மற்ற அணிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கை. இது ஆரோக்கியமான விஷயமல்ல. இது ஒரு ஃபிளாப் ஐடியா என்று ரஷீத் லதீஃப் விமர்சித்துள்ளார். 

எப்படியும் இந்த நான்கு நாடுகள் தொடரில் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக இடம்பெறாது. எனவே ரஷீத்தின் இந்த கருத்து பொறாமையில் கூறப்பட்ட கருத்தாகத்தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.