இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பொதுவாகவே நேர்மைக்கும் நியாயத்திற்கும் குரல் கொடுப்பவர் மட்டுமல்லாது, உண்மையை பொதுவெளியில் சொல்ல கொஞ்சம்கூட தயங்காதவர். 

எதற்கும் யாருக்கும் பயப்படாமல் சமரசம் செய்துகொள்ளாமல் வெளிப்படையாக தனதுகருத்தை தெரிவித்துவிடுவார். நியாயத்தின் பக்கம் நிற்பார். அந்த வகையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக பந்துவீசிவரும் நவ்தீப் சைனியை, ஆரம்பத்தில் டெல்லி ரஞ்சி அணியில் புறக்கணித்த பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவருடனும் கம்பீர் மோதிவருகிறார். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சைனி, 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறன் பெற்றவர். இவரது திறமையை கண்ட கம்பீர், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வலியுறுத்தினார். அப்போது டெல்லி ரஞ்சி அணிக்காக செலக்சன் கமிட்டியில் இருந்த முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரும் வெளிமாநில வீரரை டெல்லி அணியில் ஆடவைக்கமுடியாது என்று காரணம் காட்டி கம்பீரின் கோரிக்கையை புறக்கணித்தனர். 

இந்நிலையில், தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது முதல் போட்டியில் ஆடிய சைனி, தான் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சைனியின் சிறப்பான ஆட்டத்தை கண்ட கம்பீர், ஆரம்பத்தில் டெல்லி ரஞ்சி அணியில் அவரை புறக்கணித்த பிஷன் சிங் பேடி மற்றும் சேத்தன் சவுகான் ஆகிய இருவரையும் சீண்டினார். 

இதுகுறித்து கம்பீர் பதிவிட்ட டுவீட்டில், நீ இந்திய அணிக்காக பவுலிங் போடுவதற்கு முன்பே பிஷன் சிங் பேடி மற்றும் சவுகான் என்ற 2 விக்கெட்டுகளை சைனி எடுத்துவிட்டாய் என்று அவர்கள் இருவரையும் குத்திக்காட்டும்வகையில் சீண்டினார் கம்பீர். 

கம்பீரின் விமர்சனம் குறித்து பிஷன் சிங் பேடி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், எந்தளவிற்கு வேண்டுமானாலும் தரைமட்டத்திற்கு இறங்கக்கூடியவர் கம்பீர். நான் அவரைப்போல அல்ல. அவர் டுவீட் செய்திருந்த கருத்துக்குலாம் நான் பதில் சொல்லமாட்டேன். ஆனால் நான் சைனியை பற்றி தவறாக, குறைவாகவோ கருதியதுமில்லை, பேசியதுமில்லை. ஒருவர் இந்திய அணியில் இடம்பிடிக்கிறார் என்றால் அது அவரது திறமை. நான் டெல்லி கிரிக்கெட் வாரியத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லாதபோது, சைனியை வேண்டாமென்று சொல்ல நான் யார்..? எம்பி ஆனதற்கு பிறகும் கம்பீர் முதிர்ச்சியடையவில்லை என்று பிஷன் சிங் பேடி சாடினார். 

மேலும் சைனி குறித்து பேசிய பிஷன் சிங் பேடி, அவர் இப்போதுதான் ஒரு போட்டியில் ஆடியிருக்கிறார். அவர் ஆடியதை நான் டிவியில் தான் பார்த்திருக்கிறேன். போகப்போகத்தான் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார். 

பிஷன் சிங் பேடியின் இந்த கருத்துக்கும் கம்பீர் பதிலடி கொடுத்துவிட்டார். எந்தளவிற்கு வேண்டுமானாலும் இறங்குவேனா..? தகுதியில்லாத மகனை அணியில் சேர்க்க முயன்றவர் பிஷன் சிங் பேடி. தனது உறவினரை டெல்லி அணியில் சேர்க்க வளைந்துகொடுத்தவர் சேத்தன் சவுகான் என்று அவர்களின் உண்மை முகத்திரையை கிழித்த கம்பீர், பிஷன் சிங் பேடி, சைனியை புறக்கணித்து எழுதிய லெட்டரின் செய்தி தொடர்பான லிங்க்கையும் டுவீட் செய்துவிட்டார்.