இந்தியாவின் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ரஜிந்தர் கோயல் 77 வயதில் காலமானார். அவருக்கு சச்சின், கங்குலி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஹரியானாவை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரஜிந்தர் கோயல், 1958ம் ஆண்டிலிருந்து 1985ம் ஆண்டுவரை 27 ஆண்டுகள் முதல் கிரிக்கெட்டில் ஆடினார். 157 முதல் தர போட்டிகளில் ஆடி 750 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ரஜிந்தர் கோயல். மேலும் 53 முறை 5 விக்கெட்டுகளையும் 17 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

27 ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட்டில் ஆடியும் கூட, அவருக்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் பிஷன் சிங் பேடி முதன்மை ஸ்பின்னராக இந்திய அணியில் தக்கவைத்து கொண்டதால் ரஜிந்தர் கோயலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இலங்கை அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார்.

77 வயதான அவர், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி உள்ளிட்ட பல வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.