விராட் கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் இருந்தாலும் நம்பரின் அடிப்படையில் அவர் சிறந்த கேப்டனாகவே திகழ்கிறார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்திய அணி ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. இந்த வெற்றிகளின் மூலம் 120 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி, கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி பெற்ற 28வது டெஸ்ட் வெற்றி. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணிக்கு 27 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தோனி தான் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார். 

கோலி தலைமையில் இந்திய அணி ஆடிய 48 டெஸ்ட் போட்டிகளில் 28ல் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நம்பரின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். 

நம்பரின் அடிப்படையில் கோலி வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாலும், இந்திய அணியின் சிறந்த கேப்டன் அவர் இல்லை என்று முன்னாள் வீரர் சையத் கிர்மானி அதிரடியாக தெரிவித்துள்ளார். 

“மை நேஷன்” ஆங்கில இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், அந்தந்த காலக்கட்டத்தில் சிறந்த கேப்டன்கள் இருந்துள்ளனர். தோனி கேப்டனாக இருந்தபோது, அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்திய அணியை நம்பர் 1 அணியாக வைத்திருந்தார். அவர் தான் இந்திய அணியின் ஆல்டைம் சிறந்த கேப்டன். தோனிக்கு பிறகு கோலி கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். கோலி இன்னும் நிறைய சாதனைகளை செய்ய அவருக்கு இன்னும் அவகாசமளிக்க வேண்டும். அதனால் இப்போதே அவர் தான் பெஸ்ட் கேப்டன் என்று சொல்லமுடியாது. தோனி தான் இந்திய அணியின் சிறந்த கேப்டன். கோலி இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்று கிர்மானி தெரிவித்தார்.