கேப்டன் கூல் என்ற பெயர் பெற்ற தோனி, ஐபிஎல்லில் செம கடுப்பாகி அத்துமீறி களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சர்ச்சை சம்பவத்தை நினைவுகூர்வோம்.
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகிக்கொண்டு, ஜடேஜாவை கேப்டனாக நியமித்துள்ளார். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றுள்ளார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்திவரும் தோனி, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கேவை வீரநடை போடவைத்திருக்கிறார். சிஎஸ்கேவைத் தான் வழிநடத்திய 12 சீசன்களில் 9 முறை ஃபைனலுக்கு அழைத்துச்சென்ற தோனி, 4 முறை கோப்பையை வென்று கொடுத்தார். ஒரேயொரு சீசனை (2020) தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃபிற்கு அழைத்து சென்றவர் தோனி.
இவையனத்துமே தோனியின் நிதானமான மற்றும் தெளிவான கேப்டன்சியால் கிடைத்த வெற்றிகள். எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழல்களையும் நிதானமாக கையாண்டு கேப்டன் என பெயர் பெற்ற தோனி, செம ஹாட்டாகி அத்துமீறி களத்திற்குள் புகுந்து அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சர்ச்சை சம்பவத்தை பார்ப்போம்.
2019 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 151 ரன்கள் அடித்தது. 152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அந்த போட்டியின் கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் தோனியை கிளீன் போல்டாக்கினார் ஸ்டோக்ஸ். எஞ்சிய 3 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டோக்ஸ் 4வது பந்தை ஃபுல் டாஸாக வீசினார். ஆனால் அந்த பந்தை அம்பயர் நோ பால் என அறிவிக்க முயன்று கையை நீட்டிவிட்டார். ஆனால் ஃபுல் டாஸ் உயரமாக செல்லும் நோ பாலை லெக் அம்பயர் தான் அறிவிக்க வேண்டும். பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு இறங்கி ஆடியதால் அவர் நோ பால் இல்லை. அதனால் லெக் அம்பயர் நோ பால் கொடுக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு மற்றொரு அம்பயர் கையை நீட்டிவிட்டார். அதனால் பிரச்னை வெடித்தது. ஜடேஜா அம்பயருடன் வாக்குவாதம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே கேப்டன் தோனி மைதானத்துக்குள் நுழைந்து அம்பயர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது நோ பாலா இல்லையா என்பது லெக் அம்பயர் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் மற்றொரு அம்பயர் அவசரப்பட்டதால் பிரச்னை வெடித்தது. போட்டி நடக்கும்போது வெளியில் இருக்கும் வீரர்களோ கேப்டனோ மைதானத்துக்குள் செல்லக்கூடாது. ஆனால் பேட்டிங் ஆடும் அணியின் கேப்டனான தோனி போட்டியின் இடையே மைதானத்துக்குள் சென்று அம்பயர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான மற்றும் செம கெத்தான கேப்டன் தான் என்றாலும், அத்துமீறி அதிகப்பிரசங்கித்தனமாக மைதானத்திற்குள் நுழைந்த தோனியின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. சேவாக், மைக்கேல் வான் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் தோனியை கடுமையாக விமர்சித்தனர். தோனிக்கு ஒரு போட்டியிலாவது ஆட தடை விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தினர். ஆனால் விதிமீறலுக்காக போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதத்தை அபராதமாக விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
