இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளத்தை வீணடிக்காமல், வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடக்க காரணமாக இருந்தனர். இவர்களின் அதிரடியால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 203 ரன்கள் அடித்தது. 

204 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தாலும், ராகுலும் கோலியும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். இவர்களின் அதிரடியால் 10 ஓவரிலேயே இந்திய அணி 115 ரன்களை அடித்தது. அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ராகுல் 56 ரன்கள் அடித்தார். கோலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்த ஷ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 29 பந்தில் 58 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் மூவரும் இந்திய வீரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 5 வீரர்கள் அரைசதம் அடிப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன் வேறு எந்த போட்டியிலும் ஒரே போட்டியில் ஐந்து பேர் அரைசதம் அடித்ததில்லை.