இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவருக்கு பதிலாக ஜாக் கிராவ்லி மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இறக்கப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னர் ஷதாப் கான் நீக்கப்பட்டு, பேட்ஸ்மேன் ஃபவாத் ஆலம் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஃபவாத் ஆலம், அதன்பின்னர் அதே ஆண்டில் மேலும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அறிமுக போட்டியிலேயே சதமடித்த போதிலும், வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற ஃபவாத் ஆலம், 2009ம் ஆண்டுக்கு பின்னர் 11 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவில்லை. 

ஷதாப் கான் நீக்கப்பட்டு ஃபவாத் ஆலமிற்கு இந்த போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்த போட்டிக்கான ஏசியாநெட் தமிழின் உத்தேச அணி தேர்வில் எழுதியிருந்தோம். 2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்

இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு ஃபவாத் ஆலம் டெஸ்ட் போட்டியில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். ஃபவாத் ஆலம் இந்த 11 ஆண்டுகளில் தவறவிட்டடெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை 88. இந்த கம்பேக் சான்ஸை பயன்படுத்தி தனக்கான இடத்தை அணியில் தக்கவைக்க ஃபவாத் ஆலம் முயல்வார் என்பதில் சந்தேகமில்லை. 

2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி(கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி.