இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச பாகிஸ்தான் அணியை பார்ப்போம்.  

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்வதுடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மேலும் 40 புள்ளிகளை பெறும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றும் கூட, 2வது இன்னிங்ஸில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சொதப்பியதால், வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணியும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து டர்ன் ஆகாது என்பதால் ஷதாப் கான் - யாசிர் ஷா ஆகிய இரண்டு ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்கிவிட்டு, கூடுதல் பேட்ஸ்மேனாக ஃபவாத் ஆலமை எடுத்து மிடில் ஆர்டரில் ஆடவைக்க வேண்டும் என்று வாசிம் அக்ரம் வலியுறுத்தியிருந்தார். 

அவர் வலியுறுத்திய அந்த ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே 2009ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆடிராத ஃபவாத் ஆலமுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாசிர் ஷா ரிஸ்ட் ஸ்பின்னர்; இங்கிலாந்து அணியில் அதிகமான வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் யாசிர் ஷாவை அணியில் வைத்துக்கொண்டு ஷதாப் கானை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ஃபவாத் ஆலம் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி(கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஹாஹீன் அஃப்ரிடி.