இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 214 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் துருவ் ஜூரெல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தான் 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று காயம் காரணமாக 2ஆவது மற்றும் 3ஆவது போட்டியில் இடம் பெறாமலிருந்த கேஎல் ராகுல் 4ஆவது போட்டியிலும் இடம் பெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு பதிலாக 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆகாஷ் தீப் இடம் பெற்றுள்ளார். ஆதலால், பிளேயிங் 11ல் இடம் பெறுவதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
