மும்பை இந்தியன்ஸ் அணி வலைப்பயிற்சியின்போது சச்சின் டெண்டுல்கர் லெக் ஸ்பின் வீசி மிடில் ஸ்டம்ப்பை போல்டாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதைக்கண்ட ரசிகர்கள், சச்சின் டெண்டுல்கரை மீண்டும் களமிறங்குமாறு வலியுறுத்திவருகின்றனர்.
ஐபிஎல் 15வது சீசன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு படுமோசமானதாக அமைந்துள்ளது. 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனில் ஆடிய 8 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றி தேவை என்ற நிலையில், ஏப்ரல் 30ம் தேதி(நாளை) மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
அதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி மிகத்தீவிரமாக தயாராகிவருகிறது. மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரும் மும்பை அணியின் ஆலோசகருமான சச்சின் டெண்டுல்கர், லெக் ஸ்பின் வீசினார். அவர் லெக் ஸ்பின் வீசிய 4 பந்துகளில் 2 பந்துகள் ஸ்டம்ப்பை போல்டாக்கின.
அந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின் கானை சச்சின் டெண்டுல்கர் அவுட்டாக்கிய மேஜிக் பந்தை சச்சினின் இந்த பவுலிங் நினைவூட்டுவதாக பதிவிடிருந்தது. அந்த வீடியோ செம வைரலானது.
அதைக்கண்ட ரசிகர்கள், சச்சின் டெண்டுல்கர் மீண்டும் களத்திற்குள் இறங்கி மும்பை அணிக்காக ஆட வேண்டும் என்றும், அவருக்கு பதில் மாற்று ஃபீல்டரை இறக்கிக்கொள்ளலாம்; ஆனால் சச்சின் ஆடவேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். சச்சின் ஓய்வு முடிவை திரும்பப்பெற்று, அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருடன் இணைந்து ஆடவேண்டும் என்று டுவீட்களை தெறிக்கவிடுகின்றனர்.
