ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதேபோல் 2019 ஐபிஎல்லில் தோனி செய்த சம்பவத்துடன் ஒப்பிட்டு, தோனி - ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இருவேறு விதமாக ட்ரீட் செய்யப்பட்டதை ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் அடிக்க, 223 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில் 207 ரன்கள் அடித்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் கடைசி 2 ஓவர்களில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரில் ரன்னே விட்டுக்கொடுக்காமல் அருமையாக வீசினார். அதனால் கடைசி ஓவரில் டெல்லி அணி 6 சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. முதல் 3 பந்திலும் 3 சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையளித்தார் டெல்லி வீரர் ரோவ்மன் பவல். அதில் 3வது பந்து இடுப்பு உயரத்துக்கு மேல் வந்தது. அதனால் அது கண்டிப்பாக நோ பால் தான். ஆனால் கள நடுவர் அதற்கு நோ பால் கொடுக்காததால், உணர்ச்சிவசப்பட்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், களத்தில் இருந்த பவல் மற்றும் குல்தீப் யாதவை களத்தை விட்டு வெளியேறுமாறு அழைத்தார்.

ரிஷப் பண்ட்டுடன் இணைந்து ஷர்துல் தாகூரும் அவர்களை அழைத்தார். டெல்லி அணி உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்களுடன் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்ப, ரிஷப் பண்ட்டின் செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரிஷப் பண்ட்டுக்கும் பிரவீன் ஆம்ரேவுக்கும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பிரவீன் ஆம்ரேவுக்கு ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்பட்டது.

ரிஷப் பண்ட்டின் செயலை முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் விமர்சித்தனர். அவருக்கு போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால் இதைவிட மோசமான அத்துமீறலில் ஈடுபட்ட தோனி, ரிஷப் பண்ட் அளவிற்கான எதிர்வினைகளை எதிர்கொள்ளவில்லை.

2019 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் ஆடியபோது நோ பால் சர்ச்சை எழ, களத்திற்குள் அத்துமீறி சென்ற தோனி, கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வளவுதானே அவரது செயல் குறித்து, போட்டிக்கு பின் அவரிடம் கேட்கப்படக்கூட இல்லை. மாறாக, அவரது செயலை வர்ணனையாளர்கள் மெச்சவும் செய்தனர். 

ரிஷப் பண்ட் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில், அவருக்கு ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், தோனி ட்ரீட் செய்யப்பட்ட விதத்துடன், ரிஷப் பண்ட் ட்ரீட் செய்யப்படும் விதத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர். தோனியின் செயலை விமர்சிக்கக்கூட வர்ணனையாளர்களுக்கு தைரியமில்லை. அவருக்கு மட்டும் 50 சதவிதம் அபராதம்; ரிஷப் பண்ட்டுக்கு 100 சதவிகித ஊதியமும் அபராதம் என்றெல்லாம் ரசிகர்கள் டுவிட்டரில் விளாசிவருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…