விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த உலக கோப்பை தொடரில், வீரர்களை விளையாட விடாமல் மழை புகுந்து விளையாடுகிறது. மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டியும் கைவிடப்பட்டது. இந்த உலக கோப்பை தொடரில் ரத்தாகும் நான்காவது போட்டி இது. 

மழையால் தொடர்ந்து போட்டிகள் கைவிடப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டௌண்டனில் நேற்று காலை முதல் மழை பெய்தது. மைதானம் ஈரமாக இருந்ததால், டாஸ் போட தாமதமானது. பின்னர் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டேயிருந்ததால் போட்டி கைவிடப்பட்டது. 

இதற்கு முன்னர் கைவிடப்பட்ட போட்டிகளை விட இந்த போட்டி முக்கியமானது. ஏனெனில் உலக கோப்பை தொடரில் இதுவரை தோற்காத இரு அணிகளுக்கு இடையேயான போட்டியாக இந்தியா - நியூசிலாந்து போட்டி அமைந்திருந்தது. நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஆடி மூன்றிலுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர். இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளையும் வீழ்த்தி செம ஃபார்மில் இருந்தது. தோல்வியை தழுவாத இந்த 2 அணிகளும் போட்டி என்பதால், இருவரில் யார் கெத்து என்று இப்போது தெரிந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

பயிற்சி போட்டியிலும் கூட இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. அதற்கு இந்திய அணியால் பழிதீர்க்க முடியாமல் போய்விட்டது. போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் பிரித்து கொடுக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 5 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.