IPL 2023: இதுதான் விராட் கோலியின் பெஸ்ட் வெர்சன்..! கோலி - கம்பீர் மோதல் குறித்து ஃபாஃப் டுப்ளெசிஸ் கருத்து
ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் போட்டிக்கு பின் விராட் கோலி - கம்பிர் இடையேயான மோதல் குறித்து ஃபாஃப் டுப்ளெசிஸ் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லக்னோவில் நடந்த ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 126 ரன்கள் அடித்தது. 127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ அணியை 108 ரன்களுக்கு சுருட்டி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
இந்த போட்டியில் லக்னோ அணி இலக்கை விரட்டிக்கொண்டிருந்தபோது 17வது ஓவரில் நவீன் உல் ஹக் வைடுக்கு ரிவியூ செய்தார். அந்த சம்பவத்தின் போது நவீன் உல் ஹக்கிடம் விராட் கோலி ஷூவை காட்டி ஆவேசமாக பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டிக்கு பின்னும் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடங்கியது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா
போட்டிக்கு பின் விராட் கோலியிடம் லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் பேசிக்கொண்டிருக்க, அவருடன் (கோலி) என்ன பேச்சு என்கிற தொனியில் கைல் மேயர்ஸின் கையை பிடித்து இழுத்துச்சென்றார் கௌதம் கம்பீர். அதன்பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, மற்ற வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கம்பீர் - கோலி இருவருமே களத்தில் ஆக்ரோஷமானவர்கள். சண்டைக்கு தயங்காதவர்கள். வந்த வம்பையும் விடமாட்டார்கள்; வம்பிழுக்கவும் தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்ட, விட்டுக்கொடுக்காத இருவருக்கு இடையே பரஸ்பரம் மோதல் ஏற்பட்டால் சொல்லவா வேண்டும்..? இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, பின்னர் இரு அணியினரும் வந்து இருவரையும் அழைத்து சென்றனர்.
இதையடுத்து இருவருக்குமே போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் இதற்கு முன் 2013 ஐபிஎல்லிலும் மோதியுள்ளனர். ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களான விராட் கோலியும் கௌதம் கம்பீரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் களத்தில் கடுமையாக மோதியுள்ளனர்.
போட்டிக்கு பின் இந்த சம்பவம் குறித்து பேசிய ஃபாஃப் டுப்ளெசிஸ், இதுதான் விராட் கோலியின் பெஸ்ட் வெர்சன். அவர் உற்சாகமாக இருக்கும்போது உச்சபட்சமாக செயல்படுவார். அவருடன் ஆடுவது மிகச்சிறப்பான அனுபவம் என்றார் டுப்ளெசிஸ்.