ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டி மும்பை இந்தியன்ஸூக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே தொடங்கிவிட்டது. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார்.

2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால், பந்துவீசுவது கடினம். அதனால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. 

சிஎஸ்கே அணியின் அனுபவ, நட்சத்திர வீரரான ரெய்னா, அந்த அணியின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தவர். ஆனால் அவர் இந்த சீசனில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 5368 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இருக்கும் ரெய்னா, இந்த சீசனில் ஆடவில்லை. 

சிஎஸ்கே அணி 2008லிருந்து 2019 வரை 10 சீசன்களில்(2 சீசனில் ஆடவில்லை) ஆடியது. அந்த அனைத்திலும் சிஎஸ்கே அணிக்காக ஆடி, பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அந்த அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவரான ரெய்னா, இந்த சீசனில் ஆடாதது பெரும் இழப்புதான்.

ரெய்னா இந்த சீசனில் ஆடாததையடுத்து, அவர் இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் இறங்குவது என்பது பெரிய கேள்வியாக இருந்தது. முரளி விஜயை இறக்கலாம், ராயுடுவை இறக்கலாம், தோனியே இறங்கலாம் என்று பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவந்தனர். 

இந்நிலையில், டுப்ளெசிஸ் சிஎஸ்கே அணியில் மூன்றாம் வரிசையில் இறங்கவுள்ளார். கடந்த 2 சீசனிலும் அந்த அணியின் தொடக்க வீரராக இறங்கிவந்த டுப்ளெசிஸ், 3ம் வரிசையில் இறங்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், ஷேன் வாட்சனுடன் தொடக்க வீரராக இறங்குகிறார்.

2009லிருந்து 2013 வரை சிஎஸ்கே அணியில் ஆடிய முரளி விஜய், அதன்பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளில் ஆடிவிட்டு மீண்டும் 2018ல் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு சிஎஸ்கே அணியில் இணைந்தார். ஆனால் அவருக்கு கடந்த 2 சீசன்களில் ஆடும் லெவனில் பெரும்பாலும் இடம் கிடைக்கவில்லை. ரெய்னா இந்த சீசனில் ஆடாததையடுத்து, டுப்ளெசிஸ் 3ம் வரிசையில் இறங்குவதால், முரளி விஜய்க்கு மீண்டும் சிஎஸ்கே அணிக்காக தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிஎஸ்கே அணி:

ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.