ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதின. அபுதாபியில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் சவுரப் திவாரி அதிகபட்சமாக 42 ரன்களையும், குயிண்டன் டி காக் 33 ரன்களையும் அடித்தனர். இவர்கள் இருவரை தவிர, மற்ற வீரர்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பதின்களிலும் ஒற்றை இலக்கத்திலும் வெளியேறினர். அதனால் அந்த அணி 162 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணி, தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் முதல் 2 ஓவர்களிலேயே இழந்தது. ஆனால் அதன்பின்னர் அம்பாதி ராயுடுவும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவருமே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். ராயுடு 71 ரன்களில் ஆட்டமிழந்தாலும் டுப்ளெசிஸ் கடைசி வரை களத்தில் நின்று தனது பணியை செவ்வனே செய்துமுடித்தார். இதையடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டுப்ளெசிஸ் ஃபீல்டிங், பேட்டிங் என 2 வகையிலும் தனது அபாரமான பங்களிப்பை வழங்கினார். சிஎஸ்கே அணி வீரர்கள் தோனி, ஷேன் வாட்சன், ராயுடு, கேதர் ஜாதவ், டுப்ளெசிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா என அனைவருமே 35 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சீனியர் வீரர்கள். அதனாலேயே சிஎஸ்கே அணி Dad's Army என்றழைக்கப்படுகிறது. அதை மற்றவர்கள் பலவீனமாக பார்த்தாலும், அதுதான் சிஎஸ்கேவின் பெரிய பலமும் கூட. 

ஆரம்பத்திலேயே சிஎஸ்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டாலும், இலக்கு கடினமானது இல்லையென்பதால், பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை போட்டியை கொண்டு சென்றாலே வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் முதிர்ச்சியான ஆட்டத்தை ஆடிய டுப்ளெசிஸ் அதை செய்தும் காட்டினார். அதுதான் அனுபவம். அந்த அனுபவத்தை ஃபீல்டிங்கிலும் காட்டினார். மும்பை இந்தியன்ஸ் இன்னிங்ஸின் 15வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சவுரப் திவாரி லாங் ஆன் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கு சென்ற பந்தை அருமையாக கேட்ச் பிடித்த டுப்ளெசிஸ், பேலன்ஸ் மிஸ்ஸாகி பவுண்டரி லைனுக்குள் செல்ல நேர்ந்தபோதும், எந்த பதற்றமும் இன்றி, நிதானமாக பந்தை தூக்கிப்போட்டு, பவுண்டரி லைனுக்குள் சென்றுவிட்டு திரும்பிவந்து பிடித்தார். அந்த கேட்ச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி டுப்ளெசிஸுக்கு பாராட்டு குவிகிறது. 

மேலும் 2 கேட்ச்களையும் டுப்ளெசிஸ் பிடித்தார். மொத்தமாக அந்த போட்டியில் 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார் டுப்ளெசிஸ்.