உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மான்செஸ்டாரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் வின்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் சிறப்பாக பேர்ஸ்டோ 90 ரன்களும் ரூட் 88 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் காட்டடி அடித்தார். வெறும் 57 பந்துகளில் சதமடித்த இயன் மோர்கன், 71 பந்துகளில் 148 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

மோர்கன் அடித்த 17 சிக்ஸர்களில் 7 சிக்ஸர்கள் ரஷீத் கானின் பவுலிங்கில் அடிக்கப்பட்டது. உலகின் சிறந்த ஸ்பின் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் வலம்வரும் ரஷீத் கானின் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிட்டார் மோர்கன். இந்த போட்டியில் 9 ஓவர்கள் வீசி 110 ரன்களை வாரி வழங்கினார் ரஷீத் கான். இதுதான் உலக கோப்பை வரலாற்றில் மோசமான பவுலிங். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மோசமான பவுலிங். 

வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான ரஷீத் கானின் பவுலிங் இடது கை பேட்ஸ்மேனான மோர்கனுக்கு அடிக்க எளிதாக இருந்தது. அதனால் ரஷீத் கானை வைத்து செய்துவிட்டார். போட்டி முடிந்ததும் மோர்கனிடம், ரஷீத் கானை டார்கெட் செய்து அடித்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மோர்கன், ஏற்கனவே திட்டமிட்டுலாம் ரஷீத்தின் பந்தை அடிக்கவில்லை. எந்த வீரரையும் முன்கூட்டியே திட்டமிட்டு டார்கெட் செய்து அடிக்க முடியாது. எந்த வீரருக்கு வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட நாள் மோசமானதாக அமையும். அந்த வகையில் ரஷீத் கானுக்கு இது மோசமான நாளாக அமைந்துவிட்டது. ரஷீத் உலகின் சிறந்த பவுலர். ஏற்கனவே ரஷீத் சிறப்பாக வீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் என்று மோர்கன் தெரிவித்தார்.