கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, வரும் 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அந்த தொடர் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. அந்த தொடருக்கு தயாராகும் விதமாக இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஆடிவருகின்றனர். 

இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனும் இந்த பயிற்சி போட்டியில் கலந்துகொண்டு ஆடினார். இந்நிலையில், நேற்றிரவு திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது; வயிற்றுப்போக்கும் ஆகியுள்ளது. அதனால் இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் முடிவு வரவில்லை. ஆனால் அவர் தன்னைத்தானே தனது அறையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 

இதற்கிடையே, பாகிஸ்தான் அணியும் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.