உலக கோப்பை தொடரில் வலுவான இரண்டு அணிகளான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

இந்திய அணி இதுவரை ஒரு தோல்வி கூட அடையாத நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது இங்கிலாந்து அணி. 

இரு வலிமையான அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பர்மிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதனால் வின்ஸ் நீக்கப்பட்டுவிட்டார். இந்திய வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை நன்றாக ஆடுவார்கள் என்பதால் மொயின் அலி நீக்கப்பட்டு பிளங்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கால்விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் விஜய் சங்கர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்காம் வரிசையில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்காததால் அவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஆனால் விஜய் சங்கருக்கு ஆதரவாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் கேப்டன் கோலி. 

இந்நிலையில், தற்போது காயம் காரணமாக விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டதாக டாஸ் போடும்போது கேப்டன் கோலி தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் காண்கிறார் ரிஷப் பண்ட். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷமி, சாஹல், பும்ரா. 

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், பிளங்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட்.