இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மழையால் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி, 3.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை தொடங்கியுள்ளது. 

இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் ஃபவாத் ஆலம் நீக்கப்பட்டு ஷதாப் கான் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடனும், இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணியுடன், எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஃபவாத் ஆலமே இந்த போட்டியில் ஆடுகிறார். ஆனால் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் சாம் கரன் நீக்கப்பட்டு ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்ச்சர் தனது அதிவேகத்தில் ஆச்சரியங்களை நிகழ்த்துவார் என்ற நம்பிக்கையில் இங்கிலாந்து அணி அவரை அணியில் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி(கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வா(விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.