இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரி 191 ரன்கள் அடித்தது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 17 ரன்களுக்கும் பவுமா 32 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஹென்ரிக்ஸ் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்ததா, 9.3 ஓவரில் 64 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா இழந்துவிட்டது.

அதன்பின்னர் டுப்ளெசிஸும் வாண்டர் டசனும் இணைந்து அபாரமாக ஆடி இங்கிலாந்து பவுலிங்கை வெளுத்துகட்டினர். இருவருமே அரைசதம் அடித்தனர். டுப்ளெசிஸ் 37 பந்தி ஐந்து பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களும், வாண்டர் டசன் 32 பந்தில் தலா ஐந்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது.

192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் காட்டடி அடிக்க, பட்லரும் மாலனும் இணைந்தே போட்டியை முடித்தனர்.

அதிரடியாக ஆடிய பட்லர் மற்றும் மாலன் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். அதிரடி மன்னன் பட்லரையே ஓரங்கட்டிவிட்டு, காட்டடி அடித்தார் மாலன். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தெறிக்கவிட்டார் மாலன். 47 பந்தி 11 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 99 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 192 ரன்கள் என்ற கடின இலக்கை 18வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி எட்ட உதவினார் மாலன். மாலனின் அதிரடியால் தான் சீக்கிரமாக இலக்கை எட்டியது இங்கிலாந்து. களத்தில் இருந்தும் கூட வெறும் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார் மாலன். 

பட்லர் 46 பந்தில் 67 ரன்கள் அடித்தார். மாலன் மற்றும் பட்லரின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் டேவிட் மாலன் வென்றார்.