இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கபட்டதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது.
95 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. எனவே 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது.
கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்ததால் 157 ரன்களை இந்திய அணி எளிதாக அடிக்கும் சூழல் இருந்தது. ஆனால் கடைசி நாளில் மழை சதி செய்துவிட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டியது.
ஆனால் இன்று காலை முதல் மழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்துகொண்டிருந்ததால், 2 செசன்கள் முழுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னரும் மழை நிற்காததால், போட்டி டிரா என்று முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி, மழை காரணமாக டிராவில் முடிந்தது. தோற்றிருக்க வேண்டிய போட்டியில் மழையால் தப்பியது இங்கிலாந்து அணி.
