கடந்த பல ஆண்டுகளாகவே எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை. பாகிஸ்தான் அணிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் ஹோம் கிரவுண்டாக இருந்துவந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல தொடங்கியுள்ளன.

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றது. அடுத்ததாக இங்கிலாந்து அணி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது.

கடைசியாக மைக்கேல் வான் தலைமையிலான இங்கிலாந்து அணி, 2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றதுதான். அதன்பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு தான் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு செல்கிறது.

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி பாகிஸ்தானுக்கு செல்லும் இங்கிலாந்து அணி, அக்டோபர் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 2 டி20 போட்டிகளில் ஆடிவிட்டு, அங்கிருந்து டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக நேரடியாக அந்த 2 அணிகளும் இந்தியாவிற்கு வருகின்றன.