தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. பட்லர் வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் அதிரடியாக ஆடி 29 பந்தில் 40 ரன்கள் அடித்தார். பேர்ஸ்டோ அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் மோர்கன் பெரிதாக ஆடவில்லை. 24 பந்தில் 27 ரன்கள் மட்டுமே அடித்து அவர் ஆட்டமிழந்தார். 

ஆனால் பென் ஸ்டோக்ஸ் நன்றாக ஆடினார். டென்லி 2 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், ஸ்டோக்ஸுடன் இணைந்த மொயின் அலிதான் இங்கிலாந்து இன்னிங்ஸில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். வெறும் பத்தே பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 39 ரன்களை விளாசி பதினோறாவது பந்தில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டு சென்றார் மொயின் அலி. ஸ்டோக்ஸ் தன் பங்கிற்கு 30 பந்தில் 47 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 20 ஓவரில்ம் 204 ரன்களை குவித்தது.

205 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய டி காக், வெறும் 17 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய அவர், 22 பந்தில் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த டி காக், 8 சிக்ஸர்களை விளாசினார். டி காக் அவுட்டாகும்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 8 ஓவரில் 92 ரன்கள். 

பவுமா, மில்லரும் தங்கள் பங்கிற்கு ரன் சேர்த்தனர். ஸ்மட்ஸ், ஃபெலுக்வாயோ ஆகியோர் சோபிக்கவில்லை. ஆனால் வாண்டெர் டசன் நன்றாக ஆடினார். குயிண்டன் டி காக் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டசனும் ப்ரிட்டோரியஸும் களத்தில் நின்றனர். 

டாம் கரன் வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அடிக்காத ப்ரிட்டோரியஸ், இரண்டாவது பந்தில் சிக்ஸரும் மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடித்தார். நான்காவது பந்தில் 2 ரன்கள் அடித்தார். எனவே முதல் 4 பந்தில் 12 ரன்கள் அடிக்கப்பட்டதால், கடைசி 2 பந்தில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. மிகவும் எளிதாக தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில், ஐந்தாவது பந்தில் ப்ரிட்டோரியஸை எல்பிடபிள்யூ செய்து அவுட்டாக்கினார் டாம் கரன். அதனால் மறுமுனையில் இருந்த டசன், பேட்டிங் முனைக்கு செல்ல முடியாமல் போனது. கடைசி பந்தில் ஃபார்டியூனையும் டாம் கரன் வீழ்த்த, 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது இங்கிலாந்து. 

Also Read - சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைக்கப்போகும் ரோஸ் டெய்லர்.. முதல் சர்வதேச வீரர் இவர் தான்

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 11 பந்தில் 39 ரன்களை குவித்து ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.