Asianet News TamilAsianet News Tamil

Australia vs England: பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..! உத்தேச ஆடும் லெவன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. அந்த போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணியை பார்ப்போம்.
 

england team probable playing eleven for the third ashes test against australia
Author
Melbourne VIC, First Published Dec 22, 2021, 9:50 PM IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பையை போல முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் இரு அணிகளும் வெறித்தனமாக விளையாடும்.

ஆனால் இந்த ஆஷஸ் தொடரை பார்க்கையில், இங்கிலாந்து அணி அப்படி வெற்றி வேட்கையுடன் விளையாடுவதாக தெரியவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி, 2 டெஸ்ட்டிலுமே படுதோல்வி அடைந்திருக்கிறது. 

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட்டில் 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என பின்னடைவை சந்தித்துள்ளது. 2 டெஸ்ட்டிலுமே பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் இங்கிலாந்தின் ஆட்டம் மோசமாக இருந்தது.

அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய 2 முக்கியமான பவுலர்கள் ஆடவில்லை. அப்படியிருந்தும் கூட, முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கும் 2வது இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகி 275 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. ஆனால் அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியோ பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 473 ரன்களை குவித்ததுடன், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் இல்லாமலேயே இங்கிலாந்தை சுருட்டி வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி.

2வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தனது அணி வீரர்களின் ஆட்டத்தின் மீது அதிருப்தி தெரிவித்தார். 

இந்நிலையில், வரும் 26ம் தேதி மெல்போர்னில் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர் ஹசீப் ஹமீதுக்கு பதிலாக ஜாக் க்ராவ்லி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. ஜாக் க்ராவ்லி சரியாக ஆடவில்லை என்பதால் தான் ஹசீப் ஹமீத் இங்கிலாந்து அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது அவரும் தொடர்ச்சியாக சொதப்பிவருவதால் அவர் நீக்கப்பட்டு மீண்டும் க்ராவ்லி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

அதேபோல மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பிவரும் ஆலி போப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக ஸ்பின்னர் ஜாக் லீச் சேர்க்கப்படலாம். ஆஷஸ் டெஸ்ட்டின் முதல் 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் ஸ்பின்னர் யாரும் ஆடவில்லை. ஜோ ரூட் தான் ஸ்பின் பவுலிங் வீசினார். ஆனால் 3வது டெஸ்ட்டில் ஸ்பின்னர் ஒருவரை இங்கிலாந்து அணி ஆடவைக்கும். அதனால் வோக்ஸுக்கு பதிலாக லீச் ஆடுவார்.

சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன் - ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு மார்க் உட் சேர்க்கப்படலாம். ஆலி ராபின்சன் நீக்கப்பட வாய்ப்பில்லை.

ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, டேவிட் மலான், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜாக் லீச், ஆலி ராபின்சன், மார்க் உட், ஆண்டர்சன்/ஸ்டூவர்ட் பிராட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios