உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடி சதமடித்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பல சாதனைகளை படைத்துள்ளார். 

இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் வின்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 88 ரன்கள் அடித்த பேர்ஸ்டோ சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இதையடுத்து ரூட்டுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். 

இயன் மோர்கன் களத்திற்கு வந்தது முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். குறிப்பாக ரஷீத் கானின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். மிரட்டலாக ஆடிய மோர்கன், வெறும் 57 பந்துகளில் சதமடித்தார். மோர்கன் சிக்ஸர் மழை பொழிந்துகொண்டிருந்த நிலையில், ரூட் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய இயன் மோர்கன், 71 பந்துகளில் 4 பவுண்டரிகள், 17 சிக்ஸர்களுடன் 148 ரன்கள் குவித்து ரூட் அவுட்டான அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மொயின் அலியின் கடைசிநேர அதிரடியால், இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது. 

398 ரன்கள் என்ற இலக்கை ஆஃப்கானிஸ்தான் அணி கண்டிப்பாக அடிக்கமுடியாது என்பதால், வெற்றி பெறுவது உறுதி என்பதை தெரிந்தே பந்துவீசிய இங்கிலாந்து அணி, ஆஃப்கானிஸ்தானை 247 ரன்களுக்கு சுருட்டி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி சதம் விளாசிய இயன் மோர்கன் பல சாதனைகளை படைத்தார். இங்கிலாந்து அணி பல சாதனைகளை புரிவதற்கும் காரணமாக திகழ்ந்தார். 

1. இந்த போட்டியில் இயன் மோர்கன் 17 சிக்ஸர்களை விளாசினார். இதுதான் உலக கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஒரு வீரர் அடித்த அதிகமான சிக்ஸர். கிறிஸ் கெய்ல் 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்ஸர்களை அடித்திருந்தார். அந்த சாதனையை மோர்கன் முறியடித்தார். 

2. உலக கோப்பையில் மட்டுமல்லாது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும் மோர்கன் அடித்த 17 சிக்ஸர்கள் தான் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட சிக்ஸர்கள். இவருக்கு அடுத்த கெய்ல், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 16 சிக்ஸர்களை அடித்துள்ளனர். 

3. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 25 சிக்ஸர்களை விளாசியது. இதுதான் உலக கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்.

4. இங்கிலாந்து அணி இந்த போட்டியில் அடித்த 397 ரன்கள் தான் உலக கோப்பையில் அந்த அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர். 

5. 57 பந்துகளில் சதமடித்த இயன் மோர்கன், உலக கோப்பை வரலாற்றில் அதிவேக சதமடித்த வீரர்களின் பட்டியலில் நான்காமிடத்தை பிடித்துள்ளார். 50 பந்துகளில் சதமடித்த அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரைன், 51 பந்துகளில் சதமடித்த மேக்ஸ்வெல், 52 பந்துகளில் சதமடித்த டிவில்லியர்ஸ் ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.