பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவரும் நிலையில், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது. 3வது டெஸ்ட் மட்டும் எஞ்சியுள்ளது. 

அது முடிந்ததும் அடுத்ததாக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய 3 நாட்களும் 3 டி20 போட்டிகள் மான்செஸ்டரில் நடக்கவுள்ளது. 

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், டாம் கரன், டாம் பாண்ட்டன், ஜேசன் ராய் ஆகியோர் உள்ளனர். கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், ஜோ டென்லி, அடில் ரஷீத் ஆகியோரும் உள்ளனர். 

பென் ஸ்டோக்ஸ் தனது குடும்பத்துடன் இருப்பதற்காக, சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அதனால் அவர் பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே ஆடவில்லை. 3வது டெஸ்ட்டிலும் அவர் இல்லை. இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் பட்லர், ஜோ ரூட் ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அணியில் இல்லை. 

ஓராண்டுக்கு பிறகு கம்பேக் கொடுத்த டேவிட் வில்லி, அயர்லாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த ஒருநாள் தொடரில் அபாரமாக ஆடினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய அவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான 14 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி: 

இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், சாம் பில்லிங்ஸ், டாம் கரன், ஜோ டென்லி, லூயிஸ் க்ரெகோரி, கிறிஸ் ஜோர்டான், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லி.