இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட், ஓல்ட் டிராஃபோர்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராட் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்ததால் முதல் இன்னிங்ஸில் 369 ரன்களை குவித்தது. ஓலி போப் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார். டெயிலெண்டரான ஸ்டூவர்ட் பிராட், அதிரடியாக ஆடி 45 பந்தில் 62 ரன்களை குவித்து மிரட்டினார். 

இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இரண்டாவது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 செசனில் 6 விக்கெட்டுகளை இழந்து, நேற்றைய ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடித்திருந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஹோல்டர், டௌரிச், கார்ன்வால், கீமார் ரோச் ஆகிய நால்வரையும் விரைவாக வீழ்த்தினார் ஸ்டூவர்ட் பிராட்.  அதனால் 197 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இதையடுத்து 172 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 114 ரன்களை சேர்த்தனர். 

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே முதல் இன்னிங்ஸ் முடிந்துவிட்டதால், அதிலும் 176 ரன்கள் முன்னிலை பெற்றதால் இரண்டாவது இன்னிங்ஸில் அவசரப்படாமல் நிதானமாக ஆடி இமாலய முன்னிலையை பெறுவதற்கான ஸ்கோரை அடித்து மெகா இலக்கை நிர்ணயிப்பதற்கான போதிய அவகாசம் இருந்தது. 

அதனால் பர்ன்ஸும் சிப்ளியும் சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். அரைசதம் அடித்த சிப்ளி 56 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹோல்டர் சிப்ளியின் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து பர்ன்ஸுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை கடந்து ஆடிவருகிறது. 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுவிட்ட இங்கிலாந்து அணி, தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறது. 400-450 ரன்களை இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. கடைசி இன்னிங்ஸில் அவ்வளவு பெரிய ஸ்கோரை வெஸ்ட் இண்டீஸால் கண்டிப்பாக அடிக்க முடியாது. எனவே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது.