இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது.

இரண்டாவது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டமான இன்று, டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது. 

தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் போட்டியில் சரியாக ஆடாத ராய், இந்த போட்டியிலும் சொதப்பினார். இங்கிலாந்து அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே ராயின் விக்கெட்டை இழந்துவிட்டது. ஹேசில்வுட் வீசிய இரண்டாவது ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் ராய். இதையடுத்து பர்ன்ஸுடன் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தார்.

பர்ன்ஸும் ரூட்டும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அதற்கு ஹேசில்வுட் அனுமதிக்கவில்லை. ரூட்டை 14 ரன்களில் வீழ்த்தி அனுப்பினார். அதன்பின்னர் பர்ன்ஸும் டென்லியும் சேர்ந்தும் நீண்டநேரம் களத்தில் இருந்தனர். நன்றாக நிலைத்து ஆடிக்கொண்டிருந்த டென்லி, 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த பர்ன்ஸை 53 ரன்களில் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.

இவர்களை தொடர்ந்து ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் நிலைக்கவில்லை. அவர்களும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பட்லர் 12 ரன்களிலும் ஸ்டோக்ஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 138 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

பார்ட்னர்ஷிப் அமைத்து கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் பேர்ஸ்டோவும் கிறிஸ் வோக்ஸும் ஆடிவருகின்றனர்.