ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்மித் மற்றும் லபுஷேனை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. லபுஷேன் 48 ரன்கள் அடிக்க, ஸ்மித் 80 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் பர்ன்ஸ் 20 ரன்களிலும் கேப்டன் ரூட் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோ டென்லி இந்த இன்னிங்ஸில் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தார். 

டென்லியும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு டென்லி - ஸ்டோக்ஸ் ஜோடி 127 ரன்களை குவித்தது. டென்லி முதலில் அரைசதம் அடித்து, தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, ஸ்டோக்ஸும் அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதம் அடித்த ஸ்டோக்ஸ் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிவிட்டார். 67 ரன்களில் ஸ்டோக்ஸை நாதன் லயன் வீழ்த்தினார். 

அவரை தொடர்ந்து கொஞ்ச நேரத்திலேயே டென்லியும் 94 ரன்களில் ஆட்டமிழந்து, 6 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்ஸை போலவே இந்த இன்னிங்ஸிலும் தயங்காமல் அடித்து ஆடி ரன்களை சேர்த்தார். 47 ரன்கள் அடித்த பட்லரை அதன்பின்னரும் அதிரடியை தொடரவிடாமல் பீட்டர் சிடில் வீழ்த்திவிட்டார். 

பட்லருக்கு முன்னதாகவே சாம் கரனும் கிறிஸ் வோக்ஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிட்டனர். பட்லர் 8வது விக்கெட்டாக அவுட்டாக, ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஜாக் லீச்சும் களத்தில் இருந்த நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் அடித்துள்ளது. ஏற்கனவே 69 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் மொத்தமாக 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 

ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிப்பது உறுதியாகிவிட்டது. எனவே கடைசி இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய இலக்கை விரட்டுவது எளிதான காரியமல்ல. ஸ்மித் ஒரு வீரரால் மட்டுமே அது முடியாது. எனவே அவருக்கு மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அது சாத்தியப்படும். தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.