ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரின் அபார சதங்களால் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 507 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

முதல் டெஸ்ட் டிரா:

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவான நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

2வது டெஸ்ட்:

2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி டக் அவுட்டானார். முதல் டெஸ்ட்டில் சதமடித்த ஜாக் க்ராவ்லி இந்த போட்டியில் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். 

ஜோ ரூட் சதம்:

மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் லீஸ் 30 ரன்னில் அவுட்டாக, 80 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. 45 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி, முதல் நாள் ஆட்டத்தின் எஞ்சிய 45 ஓவர்களையும் ஆடினர்.

அபாரமாக விளையாடிய ஜோ ரூட் சதமடித்தார். சிறப்பாக ஆடிய லாரன்ஸ், முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 119 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்:

2ம் நாள் ஆட்டத்தை ரூட்டுடன் சேர்ந்து ஸ்டோக்ஸ் தொடர்ந்தார். ரூட் நிதானமாக ஆட, பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடினார். 153 ரன்கள் அடித்து ரூட் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் சதமடித்தார். ஸ்டோக்ஸ் 128 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 120 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 41 ரன்களும் ஃபோக்ஸ் 33 ரன்களும் அடித்தனர். 9 விக்கெட் இழப்பிற்கு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 507 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் 4 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான க்ரைக் பிராத்வெயிட்டும் ஷமர் ப்ரூக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் அடித்துள்ளது.