உலக கோப்பை தொடரில் தங்களது அணியின் 40 ஆண்டுகால சாதனையை தக்கவைத்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் லெவிஸ் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக தொடங்கிய கெய்ல், முதல் ரன்னையே 10 பந்துகளுக்கு பிறகு தான் எடுத்தார். அவரது கேட்ச்சை மார்க் உட் தவறவிட, அதன்பின்னர் அதிரடியாக ஆடினார். எனினும் அவரை பெரிய இன்னிங்ஸ் ஆட அனுமதிக்கவில்லை இங்கிலாந்து பவுலர்கள். 

கெய்லை 36 ரன்களில் பிளங்கெட் வெளியேற்ற, அவரை தொடர்ந்து 11 ரன்களில் ஷாய் ஹோப்பும் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பூரானும் ஹெட்மயரும் இணைந்து நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் திணறிய நிலையில், ஜோ ரூட்டிடம் பந்தை கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்.

மோர்கனின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. ரூட் தனது இரண்டாவது ஓவரில் ஹெட்மயரை வீழ்த்தினார். பூரான் - ஹெட்மயர் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்த ஜோ ரூட், தனது அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டரையும் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் பூரானுடன் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ரசலும் சோபிக்கவில்லை. வெறும் 21 ரன்களில் நடையை கட்ட, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த பூரானும் 63 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

213 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோவும் ஜோ ரூட்டும் களமிறங்கினர். இலக்கு எளிது என்பதால் இங்கிலாந்து அணி ராயை உட்காரவைத்துவிட்டு ரூட்டை தொடக்க வீரராக களமிறக்கியது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோவும் ரூட்டும் சேர்ந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

முதல் விக்கெட்டையே போடமுடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும் பேர்ஸ்டோவும் இணைந்து 95 ரன்களை குவித்தனர். பேர்ஸ்டோ 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்தது இங்கிலாந்து அணி. கிறிஸ் வோக்ஸை மூன்றாம் வரிசையில் களமிறக்கியது. 

ரூட்டுடன் ஜோடி சேர்ந்த வோக்ஸும் சிறப்பாகவே ஆடினார். ஜோ ரூட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய வோக்ஸ் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அரைசதத்துக்கு பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரூட் சதமடித்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

இதன்மூலம் 40 ஆண்டுகால சாதனையை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. 1979ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பைக்கு பிறகு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியதே இல்லை. 1987 உலக கோப்பை தொடரில் 2 போட்டிகள், 1992, 2007, 2011 ஆகிய உலக கோப்பைகளில் இரு அணிகளும் ஒருமுறை மோதின. இவையனைத்திலுமே இங்கிலாந்து அணி தான் வென்றது. 2011ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 40 ஆண்டுகால சாதனையை தக்கவைத்துள்ளது.