சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்களில் கோலியும் ஸ்மித்தும் மட்டுமே தொடர்ச்சியாக ரன்களை குவித்து சாதனைகளை நிகழ்த்தி கொண்டிருப்பதால், இவர்கள் தான் எப்போது ஹாட் டாபிக்காகவும் தலைப்பு செய்தியாகவும் திகழ்கின்றனர். 

ஜோ ரூட்டும் கேன் வில்லியம்சனும் அவர்களுக்கு நிகரான தரமான வீரர்களாக இருந்தாலும் அண்மைக்காலமாக இவர்கள் பெரியளவில் ஆடாததால், இவர்களை பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதமடித்து, தன்னை நோக்கியும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ரூட். 

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 375 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் சதமடித்தார். கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமடித்து அசத்தினார். 

முதல் 2 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கே இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் ஜோ ரூட்டும் பர்ன்ஸும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 177 ரன்களை குவித்தனர். சதமடித்த பர்ன்ஸ் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடி, தனது கிளாஸான பேட்டிங்கை ஆடிய ஜோ ரூட் இரட்டை சதமடித்து அசத்தினார். 226 ரன்களை குவித்து ரூட் ஆட்டமிழந்தார். ரூட், பர்ன்ஸை தவிர போப் மட்டுமே சிறப்பாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய போப் 75 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 476 ரன்களை குவித்தது. 

101 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் உள்ளனர். நாளை ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருப்பதால், இந்த போட்டி கண்டிப்பாக டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது.