Asianet News TamilAsianet News Tamil

எனக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம் அந்த பையன்.. இளம் வீரரை வியந்து புகழ்ந்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 
 

england captain eoin morgan hails jofra archer
Author
England, First Published Jun 15, 2019, 11:10 AM IST

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 

சவுத்தாம்ப்டனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பூரானை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர் லெவிஸ் 2 ரன்னில் வெளியேற, அதன்பின்னர் அதிரடியாக ஆடிய கெய்ல், பெரிய இன்னிங்ஸ் ஆட தவறினார். கெய்ல் 36 ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து 11 ரன்களில் ஷாய் ஹோப்பும் ஆட்டமிழந்தார். 

55 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பூரானும் ஹெட்மயரும் இணைந்து நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் திணறிய நிலையில், ஜோ ரூட்டிடம் பந்தை கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன்.

மோர்கனின் வியூகத்திற்கு பலன் கிடைத்தது. ரூட் தனது இரண்டாவது ஓவரில் ஹெட்மயரை வீழ்த்தினார். பூரான் - ஹெட்மயர் ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்த ஜோ ரூட், தனது அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் ஹோல்டரையும் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

england captain eoin morgan hails jofra archer

ஆனாலும் பூரான் மட்டும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். இவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படியான சூழலில் பூரானின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். அதன்பின்னர் பிராத்வெயிட் மற்றும் கோட்ரெலின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆரம்பத்தில் ஆர்ச்சரின் பவுலிங்கை கெய்ல் அடித்து நொறுக்கினார். ஆர்ச்சருக்கு விக்கெட்டும் விழவில்லை. ஆனால் முக்கியமான விக்கெட்டான பூரானின் விக்கெட்டை வீழ்த்திய ஆர்ச்சர், அதன்பின்னர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 213 ரன்கள் என்ற எளிய இலக்கை ஜோ ரூட்டின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. 

england captain eoin morgan hails jofra archer

போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ஆர்ச்சர் குறித்து பேசினார். ஒரு கேப்டனுக்கு ஆர்ச்சர் மாதிரி வீரர்கள் கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். எந்த மாதிரியான நெருக்கடியான சூழலிலுமே அவர் பதற்றப்படவே மாட்டார் என்று இளம் வீரர் ஆர்ச்சரை புகழ்ந்துள்ளார் இயன் மோர்கன். 

ஆனால் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இல்லை. உள்நாட்டு போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் அபாரமாக வீசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக வீசினார் ஆர்ச்சர். பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். ஆர்ச்சரின் துடிப்பான ஆட்டத்தை கண்ட இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம், டேவிட் வில்லியை நீக்கிவிட்டு ஆர்ச்சரை சேர்த்தது. தன் மீதான நம்பிக்கையை சிதைக்காத அளவிற்கு சிறப்பாக பந்துவீசிவருகிறார் ஆர்ச்சர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios