Asianet News TamilAsianet News Tamil

#ENGvsSL ஜோ ரூட் அபார பேட்டிங்.. 35 ஓவரில் மேட்ச்சை முடித்த இங்கிலாந்து..! இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
 

england beat sri lanka in first odi
Author
Chester-le-Street, First Published Jun 29, 2021, 10:24 PM IST

இங்கிலாந்து - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியில் தொடக்க வீரரும் கேப்டனுமான குசால் பெரேரா ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய குசால் பெரேரா மற்றும் மிடில் ஆர்டர் வீரர் ஹசரங்கா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். குசால் பெரேரா 73 ரன்களும் ஹசரங்கா 53 ரன்களும் அடிக்க, இவர்கள் இருவரைத்தவிர சமீரா கருணரத்னே மட்டுமே 19 ரன்கள் என்ற இரட்டை இலக்க ரன்னை அடித்தார்.

மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 43வது ஓவரில் வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபாரமாக பந்துவீசிய டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.

186 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 43 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான லிவிங்ஸ்டோன் 9 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஜோ ரூட் அபாரமாக ஆடினார். 

கேப்டன் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும் ஜோ ரூட் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து இங்கிலாந்தை வெற்றி பெற செய்தார். அவருடன் சிறிய பார்ட்னர்ஷிப் பங்களிப்பு செய்த மொயின் அலி 28 ரன்கள் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜோ ரூட்  79 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

35வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios