இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி டி காக், ஹென்ரிக்ஸ், பவுமா, கிளாசன் என யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. யாருமே கிடைத்த ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 20கள் மற்றும் 30களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 20 ஓவரில் வெறும் 146 ரன்கள் மட்டுமே அடித்தது.

147 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மாலன் களத்தில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து(55) போட்டியை கடைசி வரை இழுத்துச்சென்றதால், அவர் 18வது ஓவரில் ஆட்டமிழந்த போதிலும், இங்கிலாந்து அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.