தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் பவுமா 5 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் டி காக் 30 ரன்கள் அடித்தார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய டுப்ளெசிஸ், அதே ஃபார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 40 பந்தில் 58 ரன்கள் அடித்தார்.

வாண்டர் டசன் 37 ரன்களும், கிளாசன் 12 பந்தில் 20 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய்(0), ஜோஸ் பட்லர்(7) ஆகிய இருவருமே சொதப்ப, டேவிட் மாலனும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணியை ஜானி பேர்ஸ்டோவும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பேர்ஸ்டோ, 48 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

பேர்ஸ்டோவின் அதிரடியால் கடைசி ஓவரின் 2வது பந்திலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.