ஐசிசி மகளிர் உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. மகளிர் உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முதல் அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை டேனி வியாட் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 125 பந்தில் 12 பவுண்டரிகளுடன் 129 ரன்களை குவித்தார் வியாட்.
பின்வரிசையில் டன்க்லி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். டன்க்லி 60 ரன்கள் அடித்தார். இதையடுத்து 50 ஓவரில் 293 ரன்களை குவித்தது இங்கிலாந்து மகளிர் அணி.
294 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். லாரா குடால் (28), கேப்டன் சூன் லஸ்(20), மிக்னான் டு ப்ரீஸ் (30) ஆகியோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும் இவர்களில் யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் 38 ஓவரில் வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க மகளிர் அணி.
137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, வரும் ஏப்ரல் 3ம் தேதி நடக்கும் ஃபைனலில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
