இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடந்தது.

உலக கோப்பைக்கு முன் முக்கியமான இரண்டு அணிகளுக்கு இடையே தொடர் என்பதால் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது இந்த தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படும் நிலையில், பாகிஸ்தான் அணியும் வலுவாகவே உள்ளது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 374 ரன்கள் என்ற கடின இலக்கை வெறித்தனமாக விரட்டியது பாகிஸ்தான் அணி. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர்.

பேர்ஸ்டோ 51 ரன்களில் ஆட்டமிழக்க, 87 ரன்களை குவித்த ஜேசன் ராய் சதத்தை தவறவிட்டார். ஜோ ரூட் 40 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் கேப்டன் இயன் மோர்கனுடன் சேர்ந்து ஜோஸ் பட்லர் அபாரமாக ஆடினார். கடைசி 10 ஓவர்களில் பட்லரும் இயன் மோர்கனும் சேர்ந்து பாகிஸ்தான் பவுலிங்கை வெளுத்து வாங்கிவிட்டனர். குறிப்பாக பட்லரின் அதிரடி பேட்டிங் மிரட்டலாக இருந்தது. 

வெறும் 55 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார் பட்லர். பட்லரின் கடைசி நேர தாறுமாறு அதிரடியால் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 373 ரன்களை குவித்தது. 

374 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபகார் ஜமான் அதிரடியாக ஆடி சதமடித்தார். 138 ரன்கள் குவித்து ஃபகார் ஜமான் ஆட்டமிழந்தார். ஃபகார் ஜமானுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பாபர் அசாமும் அரைசதம் அடித்தார். ஆனால் 51 ரன்களில் பாபர் அவுட்டானார். அசிஃப் அலியுமே அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹாரிஸ் சொஹைல், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

பாகிஸ்தான் அணி அபாரமாக தொடங்கினாலும், 35 ஓவர்களுக்கு பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. டெத் ஓவர்களில் பாகிஸ்தான் அணியை அதிகமாக அடித்துவிடாமல் கட்டுப்படுத்தினர் இங்கிலாந்து பவுலர்கள். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 361 ரன்கள் அடித்தது. கடுமையாக போராடிய பாகிஸ்தான் அணி கடைசியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் பாகிஸ்தான் அணி ஆடிய விதம் அபாரமானது.