நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான அரைசதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து அணியின் டேரைல் மிட்செல்(190) மற்றும் டாம் பிளண்டெலின் (106) அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 553 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பேட்டிங் ஆடி 539 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான ஜோ ரூட்(176) மற்றும் ஆலி போப்(145) ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் முதல் இன்னிங்ஸில் 539 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
14 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வேகமாக அடித்து ஆடி முடிந்தவரை நிறைய ஸ்கோர் செய்து, இங்கிலாந்தை பேட்டிங் ஆடவைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை மனதில் கொண்டு முடிந்தவரை அடித்து ஆடியது. தொடக்க வீரர் வில் யங்(56), டெவான் கான்வே(52) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். அதன்பின்னர் டேரைல் மிட்செல் மட்டும் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததால் 249 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.
ஆனால் கடைசி விக்கெட்டுக்கு மிட்செலுடன் ஜோடி சேர்ந்த டிரெண்ட் போல்ட் சற்றுநேரம் தாக்குப்பிடித்து 17 ரன்கள் அடிக்க, அதை பயன்படுத்தி டேரைல் மிட்செல் அடித்து ஆடி அரைசதத்தை கடந்து 61 ரன்களை குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 284 ரன்கள் அடிக்க, மொத்தமாக 298 ரன்கள் முன்னிலை பெற்று 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.
கடைசி நாள் ஆட்டத்தில் 2 முழுமையான செசன்கள் மற்றும் முதல் செசனில் முக்கால் மணி நேரம் எஞ்சியிருந்த நிலையில், 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். ஆலி போப் 18 ரன்னிலும், ஜோ ரூட் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 44 ரன்களுக்கு அவுட்டானார்.
93 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். அதிரடியாக பேட்டிங் ஆடிய பேர்ஸ்டோ சதமடித்தார். 92 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் பேர்ஸ்டோ 136 ரன்களை குவித்து கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார்.
அவருடன் இணைந்து பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார். 299 ரன்கள் என்ற இலக்கை பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்டது.
