Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND முதல் செசன்லயே சோலியை முடித்துவிட்ட இங்கிலாந்து..! இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
 

england beat india by an innings and 76 runs in third test and level the series
Author
Leeds, First Published Aug 28, 2021, 5:52 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மலான், ஜோ ரூட் ஆகிய நால்வரின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 432 ரன்களை குவித்தது.

354 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தொடங்கியது இந்திய அணி. தொடக்க வீரர் ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் ரோஹித் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ரோஹித்தும் புஜாராவும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 59 ரன்னில் ஆட்டமிழக்க, புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்தார்.

புஜாரா இந்த இன்னிங்ஸில் அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். தனது வழக்கமான, மிகவும் மந்தமான பேட்டிங்கை ஆடாமல், சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். அவருடன் இணைந்து கோலியும் கவனமாக ஆடினார். இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் 3ம் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

விராட் கோலி 45 ரன்களுடனும், புஜாரா 91 ரன்களுடனும் 4ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் 4வது ஓவரிலேயே ராபின்சனின் பந்தில் இன்று ஒரு ரன் கூட அடிக்காமல் 91 ரன்னில் ஆட்டமிழந்தார் புஜாரா. அரைசதம் அடித்த கோலியும் 55 ரன்னில் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத்தொடர்ந்து ரஹானே 10 ரன்னில் ஆண்டர்சனின் பந்தில் அவுட்டாக, ரிஷப் பண்ட்டையும் ஒரு ரன்னில் அவுட்டாக்கி அனுப்பினார் ராபின்சன். அதன்பின்னர் ஷமி 6 ரன்னிலும், இஷாந்த் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில், சில ஷாட்டுகளை அடித்து ஆடிய ஜடேஜாவும் 30 ரன்னில் நடையை கட்ட, கடைசி விக்கெட்டாக சிராஜும் ஆட்டமிழக்க, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 4ம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் என்ற நிலையில், தொடங்கிய இந்திய அணியை, முதல் செசனிலேயே எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல் அவுட் செய்தது இங்கிலாந்து அணி. ராபின்சன் அபாரமாக பந்துவீசி 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios