இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 193 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அகமதாபாத் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சற்று சாதகமாக இருந்ததால், அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரின் சுழலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டர் மண்டியிட்டு சரணடைந்ததால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், அதே அகமதாபாத்தில் இன்று நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வீரர்கள், இந்திய ஸ்பின்னர்களிடம் சரணடைந்துவருகின்றனர். இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இன்னிங்ஸின் 6வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அக்ஸர் படேல், அந்த ஓவரின் 2வது பந்திலேயே சிப்ளியை 2 ரன்னுக்கும், தனது அடுத்த ஓவரில் க்ராவ்லியை 9 ரன்னுக்கும் என இருவரையுமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் அக்ஸர் படேல்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை வெறும் 5 ரன்னுக்கு எல்பிடபிள்யூ செய்து சிராஜ் வெளியேற்ற, பேர்ஸ்டோவும் 28 ரன்னுக்கு சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸ், அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் செய்த தவறிலிருந்து பாடம் கற்ற ஸ்டோக்ஸ், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட கையாண்டு அரைசதம் அடித்தார். ஆனால் அவரால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. ஸ்டோக்ஸை 55 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த, ஆலி போப்(29) மற்றும் பென் ஃபோக்ஸ்(1) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்த, சிறப்பாக ஆடிய லாரன்ஸை 46 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

3வது டெஸ்ட்டில் இந்திய ஸ்பின்னர்களிடம் சரணடைந்த இங்கிலாந்து அணி, இந்த போட்டியிலும் மளமளவென விக்கெட்டுகளை இழந்துவருகிறது. 188 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி.