Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! அதிரடி மன்னனுக்கு அணியில் வாய்ப்பு

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

england 17 members test squad announced for third test against india
Author
Chennai, First Published Feb 16, 2021, 4:29 PM IST

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் தொடர் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்துவருகிறது. இந்தியாவில் நடந்துவரும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடந்தன.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. கடைசி 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும். இரண்டிலும் வென்றால் இங்கிலாந்து முன்னேறும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் கடைசி போட்டியை எதிர்கொள்கின்றன.

வரும் 24ம் தேதி அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் தொடங்கும் இந்தபோட்டி பகலிரவு போட்டியாக நடக்கிறது. அந்த போட்டிக்கான 17 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய முக்கியமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். காயத்தால் முதலிரண்டு போட்டிகளில் ஆடாத டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜாக் க்ராவ்லி 3வது போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளார். விக்கெட் கீப்பர் பட்லர் முதல் போட்டியில் ஆடிவிட்டு, கடைசி 3 போட்டிகளில் ஆடாமல் ஒய்வில் இருக்கிறார். அதனால் 2வது டெஸ்ட்டில் பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ஜானி பேர்ஸ்டோவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஸ்பின்னர் மொயின் அலிக்கு அணியில் இடம் இல்லை. 

3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios