பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துகள் முடக்கம்
அதாவது சுரேஷ் ரெய்னாவின் பெயரில் வைத்திருந்த ரூ.6.64 கோடி மதிப்புள்ள பரஸ்பர நிதி முதலீடுகளும், ஷிகர் தவான் பெயரில் வைத்திருந்த ரூ.4.5 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத சூதாட்ட செயலியான 1xBet இன் துணை நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்காக, சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் இருவரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தெரிந்தே விளம்பர ஒப்பந்தங்களில் ஈடுபட்டனர் என்று விசாரணையில் தெரியவந்ததால் இருவரின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.
அமலாக்கத்துறை விசாரணை
இந்த விளம்பரங்களுக்கான பணம், சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளிலிருந்து பெறப்பட்ட குற்றச் செயல்களின் வருமானத்துடன் இணைக்கப்பட்ட, நிதியின் சட்டவிரோத மூலத்தை மறைப்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக அமலாக்கத்துறை இருவரிடமும் விசாரணை நடத்தி அவர்களின் நிதி ஆதாரங்களை பரிசோதனை செய்திருந்தது.
சூதாட்டத்தை எளிதாக்குகிறது
1xBet இந்தியாவில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டுள்ளது மற்றும் சமூக ஊடகங்கள், ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் இந்தியப் பயனர்களை இலக்கு வைத்து துணை பிராண்டிங் மற்றும் விளம்பரங்களைப் பயன்படுத்தியுள்ளது என்று விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. 1xBet பல்வேறு mule accounts மூலம் பணத்தை சேகரிப்பதன் மூலம் இந்தியப் பயனர்களுக்கு பந்தயம் மற்றும் சூதாட்டத்தை எளிதாக்குகிறது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மியூல் கணக்குகள்
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 6000 க்கும் மேற்பட்ட மியூல் கணக்குகள் வைப்புத்தொகைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த மியூல் கணக்குகளில் உள்ள பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தொகைகள் பல கட்டண நுழைவாயில்கள் மூலம் அவற்றின் தோற்றத்தை மறைக்க அனுப்பப்பட்டன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
