ஜடேஜா பண்ண சம்பவத்தால் பிராவோவின் தலைக்கு வந்த ஆபத்திலிருந்து நூலிழையில் அவர் தப்பினார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய புதிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் திணறிவருகின்றன.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் ஆடுகிறது. ஜடேஜாவின் கேப்டன்சி சோகமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி ஆடிய முதல் 4 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை தழுவியது. 5வது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
2வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ள சிஎஸ்கே, இன்று குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
அந்தவகையில், பயிற்சியின்போது பிராவோ பந்துவீச்சில் ஜடேஜா பேட்டிங் பயிற்சி செய்துவந்தார். அப்போது பிராவோ வீசிய பந்தை செம பவர் கொடுத்து ஸ்டிரைட்டாக அடித்தார் ஜடேஜா. அந்த பந்து பிராவோவின் தலையை நோக்கி சென்றது. நல்லவேளையாக பிராவோ விலகிக்கொண்டார். அதனால் பிராவோவின் தலை நூலிழையில் தப்பியது. கொஞ்சம் அசந்திருந்தால் தலையில் பலத்த அடிபட்டிருக்கும். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
