ஐபிஎல் 13வது சீசன் வரும் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. சீனாவுடனான எல்லை பிரச்னையால், சீனாவுடனான வர்த்தகத்தை பெருமளவில் குறைத்துக்கொண்டது இந்தியா. எனவே ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான விவோவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நெருக்கடி பிசிசிஐ-க்கு உருவானது. இதையடுத்து விவோவுடனான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 

புதிய டைட்டில் ஸ்பான்சரை தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஜியோ, டாடா, பைஜூஸ், பதஞ்சலி, ட்ரீம்11, அன் அகாடமி ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

அதில், ரூ.222 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை தட்டி சென்றுள்ளது ட்ரீம்11 நிறுவனம். ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் ட்ரீம்11க்கு வழங்கப்படுவதாக அறிவித்தார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல். 

இந்த ஸ்பான்சர்ஷிப் இந்த ஒரு சீசனுக்கு மட்டுமே. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பு விவோ ஓராண்டுக்கு ரூ.440 கோடி வழங்கியது. அதில், ட்ரீம்11-க்கு 50% சலுகை வழங்கியுள்ளது பிசிசிஐ. பைஜூஸ் நிறுவனம் ரூ.201 கோடிக்கும், அன் அகாடமி ரூ.171 கோடிக்கும் பிட் செய்திருந்தன.